இராணுவத்திடம் மக்கள் காணி: சிவமோகனுடன் பொன்சேகா சபையில் சொற்போர்

234 0

sarath-fonsekaவடமாகாணத்தில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது அமைச்சராக இருக்கின்ற பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொது மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற நாடாளுமன்ற சிவமோகனின் கோரிக்கையையும் நிராகரித்த அமைச்சர் சரத் பொன்சேகா, வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

முன்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இராணுவம் வசமிருக்கும் 617 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் முன்வைத்து உரையாற்றிய போதே இந்த சொற்போர் ஆரம்பமானது.

சபையில் சிவமோகன் எம்.பி உரையாற்றிக்கொண்டிருந்த போது குறுக்கீடு செய்த அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, “எல்லாவற்றிற்கும் இராணுவத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டாம். எல்லா தோல்விகளுக்கும் இராணுவத்தை காரணம் காட்ட வேண்டாம். நீங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கான காரணமும் இராணுவம்தான். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் உங்களால் வடக்கில் ஜனநாயகமாக அரசியலில் ஈடுபட்டிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு விடயங்களிலும் இராணுவம் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்திக்கொள்ளவும்” – என்றார்.

எனினும் அமைச்சர் சரத் பொன்சேகாவின் இந்தக் கூற்றை நிராகரித்த சிவமோகன் எம்.பி, “இது பொது மக்களின் காணி. யுத்தத்தின் பின்னர் செட்டிக்குளும் பகுதியில் இடம்பெயர்ந்தனர். அப்போது இராணுவத்தினர் மக்களின் காணிகளை கபளீகரம் செய்தனர். எனவே இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” – என்று கூறினார்.

இதனையடுத்தும் குறுக்கீடு செய்த அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, “நாட்டில் அபிவிருத்தி வரும்போது இராணுவமும் அபிவிருத்தி செய்யப்படும். எனவே பாரிய காணிகள்  தேவைப்படும். தெற்கில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கின்ற போது பலரது காணிகள் பெறப்பட்டன. இந்த நாட்டில் எல்லா இடத்திலும் இராணுவம் இருக்க வேண்டும். இராணுவம் வடக்கிலிருந்து வெளியேற வேண்டுமென உங்களால் கூற முடியாது. வடக்கில் மட்டுமல்ல, எல்லா பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும். எனவே அவற்றை ஸ்தாபிப்பதற்கு நீங்களே சரியான இடத்தை காண்பியுங்கள்” என்றார்.

எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்த சிவமோகன் எம்.பி, “எனது பார்வையில் இதனை விளங்கப்படுத்துகின்றேன். அபிவிருத்திக்கென காணிகள் பெறப்பட்டால் அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம். ஆனால் வட்டுவாகல் பிரதேசத்தில் பொது மக்களின் காணிகள் கைப்பற்றப்பட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை சுற்றுலாவுக்காக பெற்றிருக்கலாம். முள்ளிவாய்க்காலில் இராணுவத்திற்கு புறம்பான காணி இருக்கின்றது. எனினும் மக்களின் காணிகள் அனைத்தையும் இராணுவம் பெற்றுக்கொள்வதே பிரச்சினைக்குரிய விடயமாகும்” – என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் விடயங்களை மீண்டும் நிராகரித்த அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, “நாடாளுமன்றத்தில் இனவாதத்தை பிரயோகிக்க வேண்டாம். முன்னரும் இவ்வாறு இனவாதத்தை தூண்டியதால் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிட்டது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இப்படி பேசுவதறகுக்கூட உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனை ஞாபகத்தில் வைத்திருக்கவும்” என்று தெரிவித்து அமர்ந்தார்.