மலையகத் தமிழ் மக்களிடம் ரணில் மன்னிப்புக் கோர வேண்டும்- அநுர குமார

243 0

hbhgnqxயாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட விடயத்திற்கு மன்னிப்புக் கோரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலையக பெருந்தோட்ட மக்களின் தலையெழுத்து மாற்றி அமைக்கப்படாமைக்காக அந்த மக்களிடமும் மன்னிப்புக்கோர வேண்டுமென ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்புசமுதாய அபிவிருத்தி அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, சுமார் 200 வருடங்களாக அந்த மக்கள் அடிமைகளாகவே வாழ்வதாக சுட்டிக்காட்டினார்.

அநுர குமார திசாநாயக்க “யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட விடயத்திற்கு பிரதமர் மன்னிப்புக் கோரினார். எனினும் மலையக பெருந்தோட்ட மக்களின் தலையெழுத்து இவ்வாறு காணப்படுகின்றமைக்கும் அவர்களை அடிமையாக வைத்திருப்பதற்கும் அந்த பிரதேச மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அவர்களது வாழ்வு இவ்வாறு காணப்படுகின்றமைக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

1873ஆம் ஆண்டிலிருந்து இன்று 180 வருடங்களுக்கு மேலாக இந்த பெருந்தோட்ட மக்கள் எமது நாட்டின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அவர்களையும் இந்த நாட்டின் பிரஜைகள் எனக் கருதி அவர்களது அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்துள்ளோமா என்பது கேள்விக் குறியே. இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு கிடைக்கின்ற அடிப்படை விடயங்களையேனும் பெற்றுக்கொடுக்க எம்மால் முடியாமல் போயுள்ளது.“

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் சார்பான பிரநிதிகளே முன்வரவில்லை என குற்றம்சாட்டினார்.

அநுர குமார திசாநாயக்க “பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை பெற்றவர்களும், தொழிற்சங்கங்களை அமைத்து அவர்களது சந்தாப்பணத்தை பெற்றுக்கொண்டவர்களும், மலையக பெருந்தோட்ட தமிழ் தலைவர்களும் மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லை. அமைச்சர்களும் அவர்களை சார்ந்தவர்களுமே அந்த மக்களை பயன்படுத்தியுள்ளார்கள். பல சந்தர்ப்பங்களில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அந்த மக்களின் பிரதிநிதிகளே எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அவர்களது வாழ்க்கைத்தரம் உயரும் பட்சத்தில் இவர்களால் இலகுவாக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதே அதற்கான காரணம். இன்றைய தினத்தில் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் வாழும் மக்கள் சமூகம் அவர்களே. இந்திய தமிழர்கள் என அவர்களை அடையாளப்படுத்தினாலும் அவர்கள் ஸ்ரீலங்கா பிரஜைகள் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும். அவர்களும் இந்நாட்டு பிரஜைகளே.“

இந்நிலையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முறை, குறிப்பா அவர்களுக்கான வீடமைப்பு பணிகள் மந்தக்கதியில் இடம்பெறுவது தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

அநுர குமார திசாநாயக்க “பெருந்தோட்ட மக்களில் 73 வீதமானவர்கள் தற்காலிக வீடுகளில் வாழுகின்றனர். நீங்கள் தோட்டப்பகுதிகளை சென்று பாருங்கள். சில வீடுகள் பொலிதீனால் அமைக்கப்பட்டுள்ளது. சில வீடுகள் தகரங்களால் அமைக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் கதவுகள் காற்றிற்கு மூடி திறக்கின்றன. இடிந்து விழும் நிலையில் சுவர்கள். அம்பேவெல பன்னையிலுள்ள மாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறைகளுக்குள்ள வசதிகள் கூட லயன் அறைகளுக்கு இல்லை. பல வருடங்களாகவே இந்த மக்களின் பிரச்சினைகளை கண்டும்காணாத வகையில் செயற்பட்டுள்ளனர்.

தினமும் பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன எனினுதம் எதுவும் நடைபெறவில்லை. 1992ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை 25,007 வீடுகள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளன. விகிதாசார அடிப்படையில் 22 வருடங்களுக்கு, வருடமொன்றுக்கு 1,136 வீடுகள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளன. எனினும் தேவையான வீடுகள் 2,19,493 ஆகவே ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களுக்கும் வீடுகளை அமைப்பதற்கு 193 வருடங்கள் செல்லும். அமைக்கப்பட்டுள்ள வீடுகள் மண்ணோடு மண்ணாகும். இந்த வேகத்தில் வீடமைப்பு இடம்பெற்றால் இது நிச்சயம் நடைபெறும்.“

இதேவேளை, அந்த மக்களையும் மனிதர்கன் என்ற ரீதியில் மதித்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க அதற்கென விசேட வேலைத்திட்டமொன்றையும் முன்மொழிந்தார்.

அநுர குமார திசாநாயக்க “அம்மக்களை மனிதர்கள் என்ற ரீதியில் கூட மதிப்பதாகத் தெரியவில்லை. பிரித்தானியர்கள் எவ்வாறு நடத்தினார்களோ அதனைவிடவும் மோசமாகவே அவர்களை நடத்துகின்றனர். எந்த அரசாங்கம் அதிகார்ததிற்கு வந்தாலும் பரவாயில்லை. 10  வருடங்களுக்கு தேசிய திட்டமொன்றை உருவாக்கி, அவர்கள் விசேட கவனம் செலுத்துவது அவசியம். இல்லயென்றால் 50 வருடங்கள் அல்ல 100 வருடங்கள் சென்றாலும் எதுவும் நடைபெறப்போவது இல்லை.“