சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக அதிபர் ஆதரவு படையினர், கடந்த மாதம் மத்தியில் இருந்து அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சண்டையில், அலெப்போ நகரில் உள்ள பழைய நகரம் உட்பட நான்கில் மூன்று பகுதியை சிரிய ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் இழந்துள்ளனர்.அலெப்போ நகரில் பெரும்பாலான இடங்களை இழந்துள்ள நிலையில், 5 நாள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். அதேபோல் மீதமுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கிளர்ச்சியாளர்கள் முன் வைத்தனர்.
இருப்பினும், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரில் மேலும் சில பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் சிரிய ராணுவம் முன்னேறி வருகிறது.இந்நிலையில், சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிபர் ஆசாத் மற்றும் ரஷ்ய ஆதரவு படைகள் சிரியாவில் படுகொலைகளை செய்து வருவதாக அந்த தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
கனடா சார்பில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.லெபனான், ஈராக், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

