வரலாறு பாடத்தில் தமிழர் வரலாறு புறக்கணிப்பு – ஆராய விசேட குழு!

273 0

download-70தமிழ்மொழி மூலமான வரலாற்றுப் பாடத்தில் தமிழர்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாடநூல்களில் தரம் 6 முதல் 10 வரையான வரலாற்று பாடத்திட்டத்தில் தமிழர் தொடர்பான வரலாறு திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய கல்வியமைச்சின் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்தேவானந்தா, முஜிபுர் ரகுமான் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட பல தமிழ் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், கடந்த காலங்களில் நடந்த விடயங்களை மீண்டும் விவாதித்து எதுவும் நடக்க போவதில்லை. எனவே எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும். எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக ஆராயவேண்டும்.

இதற்கென மிக விரைவில் குழுவொன்று அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரைக்கமைய, விரைவில் மாற்றமொன்றைக் கொண்டுவரவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகத்தில் குறைகள் இருப்பது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், வரலாற்று பாடம் தொடர்பாக தமிழ் பேராசிரியர்கள் பலருக்கும் கடிதம் அனுப்பி இந்த பாடவிதானம் தொடர்பாக தங்களுடைய பங்களிப்பை பெற்றுத் தருமாறு கோரியிருந்த போதிலும் அவர்கள் யாரும் இந்த விடயம் தொடர்பாக எமக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை.

இதன்காரணமாகவே இக்குறை ஏற்பட்டுள்ளதாக கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.