வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க முடிவு-பிரதமர்

286 0

pirathmarவடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய பின்னர், உரையாற்றிய பிரதமர், வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளதாக குறிப்பிட்டார்.

வீட்டுத்திட்ட இழுபறி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோருடன் மாநாடொன்றை நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடபகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான பிரச்சினையும் அரசாங்கத்துக்கு இல்லையென்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தற்பொழுது சமாதான சூழலில் சுதந்திரமாக நடமாடக்கூடியதாகவுள்ளது.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் அமைச்சர்களுக்கு எதிராக தர்க்கத்தில் ஈடுபட முடியும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக எவராவது கூச்சலிட்டால் அவர் பாராளுமன்றத்தில் இருக்கமாட்டார். ஆனால் இந்த நிலைமை தற்பொழுது இல்லை என தெரிவித்த பிரதமர், இரு தரப்புக்களையும் சந்தித்து பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருப்பதுடன், வடக்கின் அபிவிருத்திக்கு கூடுதல் பணத்தை வழங்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அபிவிருத்தி தொடர்பில் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்குமிடையில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.