மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்துசுவாமிநாதனை பதவி விலக்குங்கள் – சுமந்திரன் கோரிக்கை

275 0

sumanthiranமீள்குடியேற்ற அமைச்சுப் பதவியிலிருந்து டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வேறு ஏதாவது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கக் கூடிய மாற்று இனத்தவரிடம் மீள்குடியேற்ற அமைச்சுப் பதவியை கையளிக்குமாறும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

தமிழ் பெயரை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அவரை அனுமதிக்க முடியாது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தச்சட்டமானது தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு போதிய தீர்வினைக் கொண்டிருப்பதாக அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கூறியிருந்தார்.

இதனைக் கூறுவதற்கு அவருக்கு என்ன தைரியம் உள்ளது? இதனைச் சொல்வதற்கு சுவாமிநாதன் யார்? மக்கள் உங்களைத் தெரிவுசெய்தார்களா இங்கு வந்து இப்படிக் கூறுவதற்கு.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அப்படியாயின் ஏன் நாம் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும்.

இவ்வாறான கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும். சமூகத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நீங்கள் உணரவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறது என அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

அந்த அரசியல் காரணங்கள் என்ன என்பதை கூறுமாறு சவால் விடுப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் விமர்சித்த சுமந்திரன், கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட மாற்று வீட்டுத் திட்டம் ஏன் சாத்தியமில்லாதது என்றும் கேள்வியெழுப்பினார்.

அமைச்சர் சுமாமிநாதன் மீது நம்பிக்கை இல்லையென கடந்த வரவுசெலவுத்திட்டத்தின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். இது இம்முறை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.