கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்பு

278 0

imagesயாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி கொழும்புத்துறை எழிலூர் கடற்கரையிலிருந்து மூன்று பேர் கடற்தொழிலுக்காக படகில் சென்றுள்ளனர்.

சென்றவர்களில் 32 வயதுடைய கொழும்புத்துறை மகேந்திரபுரம் எழிலூரைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையாகிய குணம் ஜெகன் என்பவர் சடலமாக பாலைதீவுக்கடலில் மிதந்த நிலையில் மீனவர்களால் இன்று மீட்கப்பட்டுள்ளார்.

40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையாகிய ஸ்ரனிஸ்லஸ் காயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடற்தொழிலுக்கு சென்ற மூவரில் காணாமல் போயுள்ள 51 வயதுடைய கஸ்தூரி பத்மசிறிதர் என்பவரை தேடும் முயற்சியில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மூவரும் கடந்த 30ஆம் திகதி சூறாவளி, தாழமுக்கம் ஏற்பட்ட போது மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் கடலுக்குள் தொழிலுக்கு சென்றவர்கள் என கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 30ஆம் திகதி ஏற்பட்ட தாழமுக்கத்தால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

முதலாவது இறப்பாக சாவகச்சேரிப் பகுதியில் இளைஞர் ஒருவர் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது பட்டமரம் முறிந்து இளைஞர் மீது விழுந்ததில் இறந்துள்ளார்.

இரண்டாவதாக கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற மீனவர் ஜெகன் இறந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 30ஆம் திகதி பருத்தித்துறையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்று கரைதிரும்பாத மீனவர்கள் நேற்று மயிலிட்டி மீனவர்சங்க இறங்குதுறையை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.