ஒட்டாவா சென்றடைந்த நடைப்போராளிகள்; கனடிய பாராளுமன்றில் இன்று மகஜர் கையளிப்பு

248 0

கனடாவின் பிரம்டன் மற்றும் மொன்றியால் நகரங்களிலிருந்து தங்கள் நெடும் நடையை ஆரம்பித்த ஏழு ‘நடைப்போராளிகள்’ நேற்றிரவு ஒட்டாவா மாநகர் சென்றடைந்தனர். இன்று 14ம் திகதி, கனடிய பாராளுமன்ற வளாகத்தினுள்ளே உள்ள அரங்கில், தாயகத்தில் காணமற்போன உறவுகள் தொடர்பான மகஜரை கனடிய அரசின் பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கையளிப்பார்கள்.

கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி டேவிற் தோமஸ், யோகேந்திரன், மகாஜெயம், விஜிதரன் ஆகிய நான்கு நடைப்போராளிள், ஒன்றாரியோவின் பிரம்டன் மாநகரத்தின் நகரசபை கட்டடம் அமைந்துள்ள வளாகத்திலிருந்தும், மற்றும் யோகேஸ்வரன், குலேந்திர சிகாமணி, விஜயகுமார் ஆகிய மூன்று நடைப்போராளிகள், கடந்த செப்படம் 6ம் திகதி, மொன்றியால் மாநகரத்திலிருந்தும் தங்கள் நெடும் நடையை ஆரம்பித்தனர் என்பது உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்திருக்கும் ஒரு எழுச்சிமிகு செய்தியாகும்.

மேற்படி எழுச்சிமிகு நடைப்பயணத்தில் பங்கெடுத்த ஏழு நடைப்போராளிகளும் அவர்களோடு தொண்டர்களாக பயணித்த ஏனைய அன்பர்களும் நேற்று மாலை ஒட்டாவா மாநகர் சென்றடைந்தனர்.

இவ்வாறு ஒட்டாவா மாநகர் சென்றுள்ள இந்த ஏழு நடைப்போராளிகளும், இன்று 14ம் திகதி திங்கட்கிழமையன்று, கனடிய பாராளுமன்ற வளாகத்தினுள்ள அரங்கொன்றில் தாயகத்தில் காணமற்போன எமது உறவுகள் தொடர்பான மகஜரை கனடிய அரசின் பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கையளிப்பார்கள்.

மேற்படி மகஜரில் இலங்கை அரசினாலும் இலங்கை இராணுவத்தினாலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீளவும் பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு அல்லது அவர்களின் தற்போதைய நிலைபற்றிய விபரங்களை உலகத்திற்கு அறியத்தரவேண்டிய பொறுப்பும் இலங்கை அரசாங்கத்திற்கே உள்ளது என்பது போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய விடயமாகும்.

மேற்படி ஏழு நடைப்போராளிகளுக்கும் உற்சாகம் ஊட்டவும் பாராட்டுக்களைத் தெரிவிக்கவும் கியுபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களிலிரு;ந்து நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இன்று திங்கட்கிழமை ஒட்டாவா பாராளுமன்றத்திற்கு முன்பாக கூடி எழுச்சிக் குரல் எழுப்பவார்கள் என்று எதிர்பார்க்கப்ப|டுகின்றது.