எம்.சி.சி.உடன்படிக்கையை இல்லாது செய்ய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – சஜித்

402 0

எம்.சி.சி.உடன்படிக்கையை இல்லாது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “இந்த அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின்போதும், பொதுத் தேர்தலின்போதும் வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக, மக்களுக்கு பல்வேறு வாக்குறுகளை வழங்கியது.

வேலைத் திட்டங்களை முன்வைத்தது. இப்போது இதனை நிறைவேற்றக்கூடிய காலம் வந்துவிட்டது. மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.

அதேநேரம், நாட்டுக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்.

எம்.சி.சி.உடன்படிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று இன்று பலரும் கேட்கிறார்கள். தேர்தல் காலங்களின்போது, இவர்கள் இந்த உடன்படிக்கை தொடர்பாக ஒரு நல்ல விடயத்தைக் கூட கூறவில்லை.

எனவே, முதல் வேலையாக நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் என நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கு எதிரான தீர்மானத்தை அரசாங்கம் நாடாளுமன்றுக்கு கொண்டுவந்தால், ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாமும் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.

அடுத்தவாரம் இந்த உடன்படிக்கைக்கு எதிரான யோசனையை கொண்டுவந்தால்கூட நாம் தயாராகவே இருக்கிறோம்.” என கூறினார்.