முதல் அமர்வும் முதல் விவாதமும்

516 0

9 ஆவது புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு கொள்கைப் பிரகடன உரையும் நிகழ்த்தப்பட்டமை ,மறுநாள் அந்தக் கொள்கைப் பிரகடன உரைமீதான விவாதம் என இருநாட்களும் பாராளுமன்றம் பரபரப்பாகவே காணப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்தப்பட்ட பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களும் தேசியப்பட்டியல் ஆசனங்களூடாக தெரிவானவர்களும் சத்தியப்பிரமாணம் செய்வதற்கும் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் ,பிரதி சபாநாயகர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரையும் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் கடந்த 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசாநாயக்க தலைமையில் கூடியது.

சுகாதார விதிமுறைகளில் தளர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் நிலையில் 9 ஆவது பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை பலர் கவனத்தில் எடுக்காத நிலையிலேயே இந்த இருநாள் சபை அமர்வுகளிலும் பங்கேற்றிருந்தனர். சபை அமர்வுகளில் பங்கேற்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், ஒருவருடன் ஒருவர் கைகுலுக்கிக்கொள்ளக்கூடாது என்பன முக்கிய சுகாதார விதிமுறைகளாக இருந்தபோதும் பல உறுப்பினர்கள் முகக்கவங்களை அணியாததுடன் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் கொண்டனர்.

அதேவேளை பாராளுமன்றக்கலரிக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக்கூறப்பட்டபோதும் பின்னர் சமூக இடைவெளி பேணப்பட்டு ஊடகவியலாளர்கள் கலரிக்கு அனுமதிக்கப்பட்டனர். முதல் நாள் காலை சபாநாயகர் கலரியில் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில் மாலைநடந்த ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையின்போது ஜனாதிபதியின் பாரியார் ,அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பாரியார் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் கலரியில் சமூக இடைவெளி பேணப்பட்டு குறிப்பிட்டளவான பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேவேளை முகக்கவசம் அணியாத ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் சபை கலரிகளிலிருந்து பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.

ஏகமானதான தெரிவுகள்

இவ்வாறான நிலையில் சபை கூடியதையடுத்து ஜனாதிபதியின் செய்தியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சபைக்கு அறிவித்து விட்டு 9ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான பெயர்களை முன்மொழியுமாறு சபையில் கோரினார்.இதனையடுத்து எழுந்த சபைத்தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி.யான மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிந்தார். மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை வழி மொழியுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கோரியபோது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார எழுந்து வழிமொழிந்தார்.

சபாநாயகர் பதவிக்கு வேறு பிரேரிக்கப்படாததால் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவால் அறிவிக்கப்பட்டதையடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் ரஞ்சித் மத்தும பண்டாரவும் எழுந்து சென்று அவரை அழைத்து வந்து சபாநாயகர் ஆசனத்தில் சபையின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் அமர வைத்தனர். இதன்பின்னர் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து சபாநாயகருக்கு கட்சிகளின் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை சிறு உரைகள் மூலம் தெரிவித்தனர்.

இவை நிறைவுக்கு வந்த பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிரதி சபாநாயகராக ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு கோரினார். இதனையடுத்து அமைச்சர் மஹிந்த அமரவீர எழுந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கேகாலை மாவட்ட எம்.பி.யான ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை முன்மொழிந்தார். இதனை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வழிமொழிந்தார் .வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் பதவிக்கு ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு கோரினார்.

இதனையடுத்து எழுந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கஜன் இராமநாதனின் பெயரை முன்மொழிந்தார்.இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க வழிமொழிந்தார் .வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவராக்க அங்கஜன் இராமநாதன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த தெரிவுகள்,சத்தியப்பிரமாண ஆரம்ப நிகழ்வின்போது சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவதானிக்க முடிந்தது.

வியாழக்கிழமை முதல் நாள் என்பதனால் உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் பெயர் குறிப்பிட்டு ஒதுக்கப்படாதபோதும் கட்சிகளின் தலைவர்கள் முன்வரிசை ஆசனங்களிலேயே அமர்ந்திருந்தனர். இந்நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோகணேசன் .தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் சுமந்திரன் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தனர். விக்னேஸ்வரனுடன் சுமந்திரன், மனோகணேசன் ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தபோதும் சம்பந்தன் இறுகிய முகத்துடன் மௌனமாகவே அமர்ந்திருந்தார். தப்பித்தவறிக்கூட அவர் விக்னேஸ்வரனின் பக்கம் திரும்பவில்லை,

இவர்களுக்கு அடுத்த வரிசையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் [ரெலோ] தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ,தமிழ் மக்கள் விடுதலைக்கழகம் [புளொட் ] தலைவர் சித்தார்த்தன் ,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜே .வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் அமர்ந்திருந்தனர். மாலை அமர்வில் இவர்கள் முன் வரிசைகளில் அமர்ந்திருந்த போதும் ஆசனங்கள் மாறியிருந்தன. அதேபோன்றே அரசு தரப்பின் பக்கத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தனும் [பிள்ளையான்] முன்வரிசையிலேயே முதலில் அமர்ந்திருந்தபோதும் மாலை அமர்வில் அவருக்கு அரச தரப்பில் பின் வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது.

கடைசி வரிசைகளில் அமைச்சரவை அமைச்சர்கள்

இதேவேளை முதல் நாள் அமர்வு என்பதனால் உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் குறிப்பிட்டு ஒதுக்கப்படாததால் முன்வரிசையை தவிர்த்து ஏனைய ஆசனங்களை இராஜாங்க அமைச்சர்கள் ,எம்.பி.க்கள் ஆக்கிரமித்து விட்டதால் அமைச்சரவை அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச,பவித்திர தேவி வன்னியாராச்சி, உதய கம்மன்பில போன்றவர்கள் எதிர்க்கட்சிப்பக்கத்திலுள்ள கடைசி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

காலையில் சபாநாயகர், பிரதிசபாநாயகர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தித்தலைவர் தெரிவுகளும் சத்தியப்பிரமாண நிகழ்வும் முடிவடைந்த நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் சபை ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரைக்காக மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கமைய பிற்பகல் 2.45 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபட்ச பாராளுமன்றத்திற்கு வருகை தந்த போது அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் வரவேற்றனர். 2.50 மணியளவில் எந்தவொரு ஆடம்பரமுமின்றி, பாதுகாப்புமின்றி, அணிவகுப்பு மரியாதைகளின்றி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் பாரியாரும் எந்தவொரு வாகனத்தொடரணியுமின்றி தனி காரில் வந்திறங்கினர். அவர்களுக்கும் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் வரவேற்றனர்.

ஒரே நாடு-ஒரே சட்டம்

இதனையடுத்து மாலை 3 மணிக்கு சபை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கூடியதுதுடன் அவர் தனது கொள்கைப்பிரகடன உரையை 35 நிமிடங்கள் நிகழ்த்தினார். அவரின் உரையில் அபிவிருத்திக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகளினால் விமர் சிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப்பொறுப்புக்களுக்கான விளக்கங்களையும் ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தினார். அத்துடன் ஒரே நாடு ; ஒரே சட்டம் 19 ஆவது திருத்தத்தை நீக்குதல், புதிய அரசியலமைப்பு, கலப்பு தேர்தல் முறை, பௌத்தத்திற்கு முன்னுரிமை ,வீண் விரயம், ஊழல், பாதாளக்குழுக்கள், போதைவஸ்துக்கள் ஒழிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த ஜனாதிபதி தனது உரையில் நாட்டின் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலோ, வடக்கு,கிழக்கு மக்கள் தொடர்பிலோ, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

விக்கிக்கு தனி வணக்கம்

ஜனாதிபதி சபைக்குள் வரும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அப்போது எவருக்குமே வணக்கம் செலுத்தாத ஜனாதியாப்தி தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சவுக்கு மட்டும் தலைகுனிந்து வணக்கம் செலுத்திவிட்டு தனது கொள்கைப்பிரகடன உரையை நிகழ்த்தினார். பின்னர் போகும் பொது மீண்டும் தனது சகோதரருக்கு வணக்கம் செலுத்தியதுடன் எதிர்க் கட்சித்தலைவர் சஜித்துக்கும் வணக்கம் செலுத்தினார். அப்போது சம்பந்தனும் வணக்கம் செலுத்தவே அவருக்கும் பதில் வணக்கம் செலுத்திவிட்டு அரச தரப்பின் பக்கமே தனது பார்வையை செலுத்தி சென்ற ஜனாதிபதி எதிர்க்கட்சி தரப்பின் முன்வரிசை ஆசனத்தில் இறுதியில் நின்ற விக்னேஸ்வரனுக்கு தனி வணக்கம் ஒன்றை செலுத்தினார் விக்னேஸ்வரனும் பதில் வணக்கம் செலுத்தினார். எனினும் விக்னேஸ்வரனுக்கு அருகில் நின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதிக்கு வணக்கம் செலுத்தவில்லை.

விக்கிக்கு வந்த எதிர்ப்பு

வியாழக்கிழமை ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப்பிரகடன உரை மீதான விவாதம் மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெறுவதற்காக சபை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதனையடுத்து தீர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வெளிவாரிப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்த நிலையில் அதற்கு சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன பதில் வழங்கிய நிலையில் இருவருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி தரப்புக்களிலிருந்து ஒழுங்குப்பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. இதனால் சபையில் சிறிது நேரம் கூச்சல்கள் எழுந்தன.

இந்த சூழலில் ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட எம்.பி.யான மனுஷ நாணயக்கார ஒரு ஒழுங்கிப்பிரச்சினையை எழுப்பவே அதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அனுமதிவழங்கினார். தனது ஒழுங்குப பிரச்சினையை மனுஷ நாணயக்கார முன்வைக்கையில், இலங்கை தமிழர் பூமி எனவும் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் எனவும், தமிழ் மொழி இந்த நாட்டில் பிரதான மொழி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் வியாழக்கிழமை சபையில் முன்வைத்த கருத்துக்கள் தவறானவை . அவரது நிலைப்பாட்டை பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிய முடியாது. எனவே விக்கினேஸ்வரனின் கருத்தை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும்.பாராளுமன்றத்தில் நாம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது இந்த நாட்டில் இன்னொரு இராச்சியத்தை உருவாக்குவதோ அல்லது அதற்கு துணை போவதோ, நிதி மூலமாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவ மாட்டோம் என வாக்குறுதியளித்தோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாட்டிற்கு சகலரும் ஒன்றிணைய நினைக்கும் இந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற முதல் நாள் அமர்வில் முன்வைத்த கருத்துக்கள் மிகவும் மோசமானவை.

தமிழ் மொழி இந்த நாட்டில் பிரதான மொழி எனவும், இந்த நாட்டின் பூர்வீக குடிகளின் மொழி எனவும் பாராளுமன்றத்தில் கூறினார். இந்த கருத்துக்களை பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிவு செய்யக்கூடாது. இது தவறான கருத்தாகும். இந்த பூமி யாருடையது, யார் பூர்வீக குடிகள் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்க முடியும். ஆனால் அந்த நிலைப்பாடுகள் இலங்கை பாராளுமன்றத்தில் ஹன்சார்ட் பதிவிற்கு செல்ல முடியாது. எனவே விக்கினேஸ்வரனின் கருத்தை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

இந்த ஒழுங்குப்பிரச்சினைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில், நான் இது குறித்து ஆராய்ந்து பார்க் கின்றேன் என்றார். மனுஷ நாணயக்கார எம்.பி. இந்த ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பியபோது விக்னேஸ்வரன் சபையில் இருக்கவில்லை. எனினும் சிறிது நேரத்தில் அவர் சபைக்குள் வந்தமர்ந்தார்.எனினும் அவருக்கு தன்னைப்பற்றி இவ்வாறு ஒரு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரன் பக்கத்தில் வந்தமர்ந்தபோது தெரிவிக்கவில்லை.

மாமாவின் உரைக்கு விவாதம் கேட்ட மருமகன்

இதேவேளை வியாழக்கிழமை ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கைப்பிரகடன உரைக்கு விவாதம் கோரப்போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தபோதும் ஜனாதிபதி கோத்தபாய,பிரதமர் மஹிந்த ஆகியோரின் சகோதரியின் மகனும் முதல் தடைவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவான மாத்தறை மாவட்ட எம்.பியுமான நிபுண ரணவக்க தனிநபர் பிரேரணை மூலம் ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கைப்பிரகடன உரைக்கு விவாதம் கோரியிருந்தார். இதற்கமைய 9 ஆவதுபுதிய பாராளுமன்றத்தின் முதல் விவாதத்தை ஆரம்பித்துவைத்த கௌரவத்தை மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவ முதன்முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான நிபுண ரணவக்க எம்.பி. பெற்றுக்கொண்டார்.

இதற்கமைய ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகனும் மாத்தறை மாவட்ட எம்.பியுமான நிபுண ரணவக்க ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.அவர் தனது உரையில் 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான மஹிந்த ராஜபக்ச அப்போதையஅரசின் கொள்கைப்பிரகடன உரை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்துவைத்த பின்னர் அவ்வாறானதொரு பெருமை இரண்டாவது உறுப்பினராக தனக்கு கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

ஒரேநாடு ஒரே சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் ஒரேநாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபாதியின் அறிவிப்பே எதிர்க்கட்சிகளினால் குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் கட்சிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அத்துடன் வடக்கு,கிழக்கு மக்கள் தொடர்பில் தனது கொள்கைப்பிரகடன உரையில் ஜனாதிபதி கவனம் செலுத்தாமை தொடர்பிலும் தமிழ் கட்சிகளினால் குற்றம்சாட்டப்பட்டது. அதேவேளை ஜனாதிபாதியின் உரையிலுள்ள பல விடயங்கள் பாராட்டவும் பட்டன.

சம்பந்தன்-அனுர தவிர்ப்பு

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கட்சிகளின் தலைவர்கள் பலரும் உரையாற்றியபோதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி [ஜே .வி.பி] தலைவரான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைக்கவில்லை. எனினும் அவர்களை காட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் உரையாற்றினர்

. விக்கியின் பேச்சை நிறுத்திய அங்கஜன்

இந்த விவாதத்தின்போது பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவரான அங்கஜன் இராமநாதன் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த போதே தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உரையாற்றினர். இதில் விக்னேஸ்வரன் உரையாற்றும் போது அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தொடர்பில் இரு தடவைகள் அங்கஜன் நினைவூட்டி உரையை முடிக்குமாறு தெரிவித்தபோதும் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவரின் ஒலிவாங்கியை முடக்கி உரையை நிறுத்திய பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவரான அங்கஜன் அடுத்த உறுப்பினருக்கு சந்தர்ப்பம் வழங்கினார். இதன்போது தனக்கு 12 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்ததாக விக்னேஸ்வரன் தெரிவித்தபோது உங்களுக்கு 5 நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளன. எனினும் நான் மேலதிகமாகவும் உங்களுக்கு நேரம் தந்தே, எனினும் நீங்கள் உங்கள் உரையை முடிக்கவில்லை. எனவே மேலும் உங்கள் உரைக்கு அனுமதிக்க முடியாது என அங்கஜன் பதில் வழங்கினார். இதனால் விக்னேஸ்வரனின் உரை பாதியிலேயே முடிவடைந்தது.

விக்கினேஸ்வரனுக்கு மட்டுமன்றி சிங்கள உறுப்பினர்கள் உரைகளின்போதும் அங்கஜன் இராமநாதன் இறுக்கமாகவே நடந்து கொண்டார்.

அருவருப்பான பேச்சுக்கள்

இதேவேளை ஜனாதிபதியின் கொள்கைபிரகடன உரையின்போது பேச்சுக்களும் இடம்பெற்றன.வழக்கமாகவே அப்படியான பேச்சுக்களை பேசும் இராஜாங்க அமைச்சரான நிமல் லான்சாவே ஒரு சில எதிர்க்கட்சி உறுப்பினர்களை குறிப்பிட்டு பெண்களின் ஆடை ,மனைவி,மகள் இவ்வாறான பேச்சுக்களை வெளிப்படுத்தினார். இதனால் அந்த உறுப்பினர்களும் விலைமாதர்கள் தொடர்பில் நிமல் லான்சாவுக்கு பதிலடி கொடுத்தனர். காலை 9.30 மணிக்கு ஆரம்பமான விவாதம் மாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்றது. இறுதியில் வாக்கெடுப்பு எதுவுமின்றி ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரை நிறைவேற்றப்பட்டது.

பா.கிருபாகரன்