சாத்தான்குளம் சம்பவம்- முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

258 0

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதலமைச்சரை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராஜாராமன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்ததாக முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக மனுதாரர் கூறியிருந்தார். மேலும், முதலமைச்சரின் பேச்சு குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கில் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முதல்வரை விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.