உலக சமத்துவ நாள்: வீடுகளில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள் விழா!

340 0

ஊரடங்கு காரணமாக வெளியே செல்ல முடியாவிட்டாலும்கூட, மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் பிறந்த நாளில் அனைத்துலக சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

மதுரையில் ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாளன்று ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பொதுமக்களும், பட்டியலின அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் 144 தடை உத்தரவுக்கு மதிப்பளித்து, தங்கள் வீடுகளில் இருந்தபடியே அம்பேத்கர் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

வீடுகளில் அம்பேத்கர் புகைப்படம் இல்லாதவர்கள் பத்திரிகை, புத்தகங்கள், பாடப்புத்தகம் போன்றவற்றில் இருந்த அவரது படத்தை வைத்து, வீட்டில் பூத்த செம்பருத்தி, மல்லிகை போன்ற பூக்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை அனைத்துலக சமத்துவ நாளாகப் கடைப்பிடித்து, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் 14-ஐ வாசித்து உறுதிமொழி ஏற்க வேண்டும்” என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, முகநூல் நேரலையில், “இந்திய அரசானது தனது ஆட்சிப் பரப்புக்குள் சட்டத்தின் முன்னால் சமத்துவத்தையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவத்தையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது. அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள சமத்துவ உரிமையைப் பாதுகாத்திடவும், அதன் மூலம் சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் அனைவருக்குமான சமத்துவத்தை வென்றெடுக்கவும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று உறுதியேற்கிறோம்” என்று திருமாவளவன் சொல்லச் சொல்ல, வீட்டில் இருந்தபடியே விசிகவினர் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

“வழக்கமாக நாங்கள் மட்டும் வெளியே போய் நிகழ்ச்சியில் பங்கேற்போம். ஊரடங்கு புண்ணியத்தால் குடும்பத்தினருடன் சேர்ந்து மரியாதை செலுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் வாய்ப்பு கிடைத்தது” என்றார் விசிக நிர்வாகி தா.மாலின்.

இதற்கிடையே அவனியாபுரத்துக்கு கரோனா தடுப்பு ஆய்வுப்பணிக்காகச் சென்றிருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.