இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட வலி.வடக்கின் பகுதிகளை மீள விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் – தென்னிலங்கை மக்கள்(காணொளி)

334 0

jaffna-sapathiயாழ்ப்பாணம் வலி.வடக்கிலுள்ள விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்க தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் என தெற்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழ்ப்பாணம் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் மக்களுடன் கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டனர்.

போர்க் காலத்தில் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட வலி.வடக்கின் பகுதிகளை மீள விடுவிப்பது தொடர்பில் தெற்கு சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடும் நிலையில், உண்மை நிலையை தெற்கு மக்கள் அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் கைகோர்பு நல்லிணக்க அடிப்படையில் வடக்கின் நிலைமைகளையும், முகாம் மக்களையும் பார்வையிட்டு வருமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவித்த தெற்கு மக்கள் இதனடிப்படையில் முகாம் மக்களைப் பார்வையிட்ட போது குறித்த கருத்தினை முகாம் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக மூன்று நாள் பயணமாக வருகைதந்த மாத்தறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாத்தறை மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

தெற்கிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு யாழ்ப்பாண பழைய பிரதேச செயலக மண்டபத்தில் வடக்கு மற்றும் தெற்கு மக்கள் இணைந்து மதிய போசனத்தை தயாரித்து பரிமாறிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம், பொரிய மதவடி குடியிருப்பு மற்றும் கண்ணகை முகாம் உள்ளிட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு கலந்துரையாடினர்.

மேலும் நல்லூர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், மற்றும் சங்கானை பிரதேச செயலகம் ஆகியவற்றுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வீட்டில் தங்கி இரவுப் பொழுதினைக் கழித்து, இன்று அதிகாலை நாகதீபத்தை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.