பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓரிருநாட்களில் அத்தியவசியப் பொருட்கள் விநியோகம்- இராதாகிருஷ்ணன்

19 0

நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஓரிரு தினங்களில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலாளர். ஆர்.எம்.பீ.புஷ்பகுமார தன்னிடம் இதனைத் தெரிவித்ததாக நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவது தொடர்பாக இன்று காலை நுவரெலியா மாவட்டச் செயலாளரிடம் தொடர்புகொண்டு நிலைமைகளைத் தெளிவுப்படுத்தினேன். இந்நிலையில் இதுகுறித்த நடவடிக்கை தொடர்பாக மாவட்டச் செயலர் எனக்கு விளக்கமளித்தார்.

அதனடிப்படையில், சதொச நிறுவனம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு கடன் அடிப்படையில் மானிய விலையில் பொருட்களை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றது. இதனை தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி அந்தத் தொகையை அவர்களுடைய எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அறவிடுவதற்கு கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது, நான் அவரிடம் இந்தச் செயற்பாடுகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். அதேநேரத்தில் இவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற போது, நாங்கள் கட்சி, தொழிற்சங்க அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு மலையக மக்களுக்காக ஒரு நிதியத்தை ஏற்படுத்தி அதில் அதனை அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் தெரிவுசெய்து சுயாதீனமாக இயங்குவதற்கான ஏற்பாடொன்றைச் செய்யவேண்டும்.

அப்படிச் செய்தால் அந்த நிதியத்திற்கு வர்த்தகர்களும், தனவந்தர்களும் உதவி செய்வதற்கு முன்வருவார்கள். எனவே இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.