ஒளிக்கும் இருளுக்கும் அப்பால்…..!

36 0

பித்தன் , பாவலன் , காதலன் மூவரும்
காலடி மண்ணையும் காதலி கண்ணையும்
முத்தமிட முடியாமல் தோற்றுப்போனோர்

 

ஆயிரம் கால்கள் அவருக்கிருந்தாலும்
நடக்க மறந்து தடுமாறுகிறார்கள்
அறம் முறிந்த கற்பனைகளுடன்
புதிய வடிவங்களைச் செதுக்குகிறார்கள்

அவர்களில் பலர்
ஊனம் ஞானத்தைத் தருகிறது
– என்கிறார்கள்
உண்மைதான்.

பார்வை இழந்தவர்கள்
ஒளி பற்றித் தருகிறத படிமங்களுக்கு
மற்றவர்கள் கவிதை இணையாகாது
காலற்றவள் தனது எந்திரக் கதிரையை
குதிரையாக மாற்றுகிறாள்

அவளுக்கு எஞ்சியிருக்கும்
இரண்டே இரண்டு பொன்னிற சிறு விரல்களால்
தானியங்களைக் கொய்கிறாள்
”என்னே விரைவு” எனப்
பின்னே ஒதுங்குகிற கிளிகள்

 

அழகு தான் அழகு தான்
என்றாலும்

வெற்று வார்த்தையும் வசனமும்
அலங்காரமும் எங்களுடைய போலி
உணர்வுத் தோழமையும்
காலற்றவர்களை நடைபாதைகளிலிருந்தும்
எமது சிந்தனைகளிலிருந்தும்
வெளியேறுகின்றன

அவர்களுக்கு ஒளி
உங்களுக்கு இருள்

கவிஞனோ இரண்டுக்கும் அப்பால்

சேரன்