ஒரு தாய் என்ற முறையில் இந்த தண்டனையை வரவேற்கிறேன்- குஷ்பு

225 0

நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை ஒரு தாய் என்ற முறையில் வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தனை வருடங்கள் கடந்து அவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய குற்றம் நடக்கும்போது ஏன் இத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது?
காங்கிரஸ்

கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. காங்கிரசின் வீழ்ச்சிக்குக் காரணமே நிர்பயா வழக்குதான் என்பார்கள். எதற்காக இத்தனை ஆண்டுகள் காத்துக் கிடந்தோம்? ஏன் அவர்களிடம் இவ்வளவு கனிவான போக்கைக் கையாண்டோம்? தூக்கு தண்டனை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும்.

மனித உரிமை ஆணையம் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லும். என்னை மாதிரியானவர்கள் வேண்டும் எனச் சொல்வோம். இம்மாதிரியான குற்றங்களுக்கு ஒரு துளி கூட கருணை காட்ட முடியாது. இறுதியில் இவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு தாய் என்ற முறையில் இந்த முடிவை வரவேற்கிறேன்.

கடுமையான தண்டனை வழங்கினால்தான் குற்றவாளிகளுக்கு பயம் வரும் என்கின்றனர். ஆனால், தண்டனை வழங்குவதற்கு முன்பே இத்தனை வருடங்கள் குற்றவாளிகளைப் பாதுகாத்தால் அவர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்? உடனடியான நீதி தேவைப்படுகிறது.

இம்மாதிரியான குற்றவாளிகளுக்கு எந்தவித கருணையும் காட்டாமல் உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் நம் சமுதாயத்தில் பயம் ஏற்படும்.

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.