கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுத் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் திகதி முதல் இன்று 12 மணி வரையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக பொதுத் தேர்தல் நடத்தப்படுவதில் சந்தேகம் எழுந்தது.
எவ்வாறாயினும் பொதுத் தேர்தல் இடம்பெறுமென அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வந்தது. எனினும் இலங்கையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையிலேயே தேர்தலை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

