புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம்!

311 0

புத்தளம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 04.30 மணி முதல் கால வரையறை அற்ற  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாபம், தங்கொட்டுவ, கொஸ்வத்த, மாதம்பே, மாரவில, வென்னப்புவ, ஆராச்சிகட்டு ஆகிய பிரதேசங்களிலும், நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அனைவரும் தமது வீடுகளுக்குள் இருப்பது அவசியம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் தமது பயணங்களை கூடுமான வரையில் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் ஊடாக இடம்பெறும் பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளுக்கும் இடையூறு இருக்காது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணிப்போர், தமது விமானப் பயணச் சீட்டை ஊரடங்கு கால அனுமதிச் சீட்டாகப் பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.