முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
மூன்று பேர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த மனு இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தங்களை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கட்ட பிடியாணையை வலுவிலக்க செய்யுமாறு கோரி ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களினால் குறித்த மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கு மக்கள் அவதானிக்கும் முக்கிய விடயம் என்பதன் காரணமாக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அதனை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனக்கோரி சட்டமா அதிபர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
2016ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
எனினும் கடந்த சில நாட்களாக அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் அவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

