ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

279 0

geeth-720x480இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவினுடைய அரசாங்கம் ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கியது. சிறீலங்காவுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிப்பொறிமுறையினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை ஒபாமா அரசாங்கம் வழங்கியிருந்தது.

இருப்பினும், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் இதே நிலமை நீடிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. காரணம், புதிதாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ரொனால்ட் ரம்ப்பினுடைய இராஜதந்திரப் பார்வையானது மாறுபட்டதாகவே இருக்கப்போகின்றது. இது ஈழத்தமிழருடைய கோரிக்கை மற்றும் அவர்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் பிரச்சினை குறித்தான எதிர்ப்பார்ப்புகளுக்கு பங்களிப்புகள் வழங்காது.

எனவே, ஈழத் தமிழர்கள் தனியான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன்மூலமே, அவர்களது உரிமைப் போராட்டத்தில் அல்லது மனித உரிமை மீறல் விவகாரத்தில் உரிய நியாய தீர்ப்பினை எட்டமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.