அத்தியாவசியப் பொருட்களின் விலை வானைத் தொட்டுள்ளமைக்கு யார் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் “ஜனாதிபதித் தேர்தலின்போது, அத்தியாவசியப் பொருட்களைக் காண்பித்து பிரசார மேடைகளில், தற்போதைய அரசாங்கத் தரப்பினர் எம்மைக் குறைக் கூறினார்கள். தற்போது நாம் இதனையே அரசாங்கத்தரப்பினரைப் பார்த்துக் கேட்கிறோம்.
இப்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை வானைத் தொட்டுள்ளது. இதற்கு யார் காரணம் என நாம் கேட்க விரும்புகிறோம்.
உலக சந்தையில் எரிப்பொருளின் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் விலைக் குறையாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றும் அரசாங்கம் கூறவேண்டும். ஒட்டு மொத்த மக்களும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மக்களை மீட்பதற்காகவே, எதிர்க்கட்சிகள் நாம் ஒன்றிணைந்து பலமான கூட்டணியொன்றை ஸ்தாபித்துள்ளோம். இந்த ஐக்கிய மக்கள் சக்திக்கு மேலும் பலம் சேர்க்கும்வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய இன்று ஐக்கிய முன்னிணியுடன் உத்தியோக இணைந்துக் கொண்டுள்ளது” என கூறினார்.

