ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாது போய்விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியே, முன்னாள் ஜனாதிபதி என நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளேன்.
இதனை நாடாளுமன்றிலும் நான் வெளிப்படுத்தியுள்ளேன். மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக நான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தேன்.
ஆனால், இந்த நன்றியை நான் மீண்டும் பெற்றுக்கொள்கிறேன். ஏனெனில், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதிதான் கூட்டணியின் தலைவராக இருக்கிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த விடயத்தில் சுயாதீனமாக செயற்படுவார் என்று எதிர்ப்பார்த்தோம்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இதனைத்தான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியை இந்தப் பதவிக்கு நியமித்துள்ளமையின் ஊடாக, ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் சுயாதீனமான இடம்பெறும் என்ற நம்பிக்கை இல்லாது போயுள்ளது.
பிரதானமாக கத்தோலிக்க மக்களை ஏமாற்றும் வகையிலேயே இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது. இனிமேல். இந்த ஆணைக்குழுவின் ஊடாக எதனையும் எதிர்ப்பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.

