கோட்டாவை பலப்படுத்தும் நோக்கிலேயே பொதுத்தேர்தலில் களமிறங்குகிறோம்- மைத்திரிபால

245 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரித்தானியர்களிடம் சுதந்திரம் பெற்று நாடு என்ற ரீதியில் நாம் தலைத்தூக்கிக் கொண்டிருக்கும்போது தான், யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.

30 வருடங்களுக்கும் மேல் நீடித்த இந்த யுத்தம்தான் இலங்கையை வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளியது. மக்களை ஏழைகளாக்கியது.

யுத்தத்தின்போது பெற்றுக்கொண்ட கடன்களை நாம் இன்றும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த யுத்தம் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினையாகுமே ஒழிய, இயற்கையாக தோன்றியதல்ல.

அரசாங்கங்கள் எவ்வளவு சிறப்பான திட்டங்களைக் கொண்டுவந்தாலும், இதன் பலனை மக்களால் முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளது.

நாம் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டாலும், நாடு என்பதற்குத் தான் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இதற்காகத் தான் நாம் மீண்டும் பொதுத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானிக்கவுள்ளோம். ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்தவுடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் தீர்மானித்தேன்.

எனினும், எமது கட்சியினர் என்னிடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்கவே நான் மீண்டும் களமிறங்கவுள்ளேன்.

அத்தோடு, புதிய ஜனாதிபதி 2015 ஆம் ஆண்டில் நான் அனுபவித்ததைப் போன்ற சவாலுக்குத்தான் தற்போது முகம் கொடுத்து வருகிறார்.

எனினும், அப்போது எனக்கு மஹிந்த ராஜபக்ஷ முழுமையான ஆதரவினை வழங்கிய காரணத்தினால்தான் வரவு- செலவுத் திட்டத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருந்தது.

இந்த ஒத்துழைப்பு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைப்பதில்லை. இதனால்தான் நாம் அவரை பலப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

புதிய அரசாங்கமொன்று வந்தவுடன், அதனை கவிழ்க்கத்தான் அனைவரும் முற்படுகிறார்கள்.

இது கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும். நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாம் ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒத்துழைத்தே ஆக வேண்டும்.

அதற்கிணங்க, பொதுத்தேர்தலில் நாம் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, புதிய ஜனாதிபதியை பலப்படுத்தவே தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.