பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவது உறுதி-ரமேஷ் பத்திரண

332 0
மலையக மக்களுக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து அதிஉச்ச ஒத்துழைப்பை வழங்குவேன் என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) காலை ஹட்டன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியதாவது, நான் சிறுவனாக இருக்கும்போது, மலையக மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக – வாழ்க்கை நிலை மேம்பாடு தொடர்பில் கதைக்கும்போது சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற நபர் தவிர்க்கமுடியாத இடத்தைப்பிடிப்பார்.எனவே, செளமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் மலையக மக்கள் தொடர்பில் எனது தந்தையான அமரர் ரிஷட் பத்திரணவின் மனதில் சிறந்த நன்மதிப்பு , கௌரவம் இருந்தது.

அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது இப்பகுதியிலுள்ள மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னால் முடிந்த நடவடிக்கைகளை அன்று முன்னெடுத்தார். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருக்கும் நான் உங்களுக்கு (மலையக மக்களுக்கு ) வழங்கவேண்டிய அனைத்துவித ஒத்துழைப்புகளையும் அமைச்சர் தொண்டமானுடன் இணைந்து வழங்குவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து இரவு – பகல் பாராது மலையக மக்களுக்காக அமைச்சர் தொண்டமான் தீவிரமாக செயற்பட்டுவருகிறார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடினார். இதற்கு எமது அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியது. நிச்சயம் அந்த தொகை கிடைக்கும். அதுமட்டுமல்ல உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். அதற்காக தொண்டமான் சிறந்த தலைமைத்துவத்தை மக்கள் சார்பில் வழங்கிவருகிறார்.

அதேவேளை, எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்தை சிறந்த இடத்துக்கு கொண்டவருவதற்கு கடந்த 100 வருடங்களாக பெருந்தோட்ட மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவந்துள்ளனர். தேயிலை பொருளாதாரம் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் 231 பில்லியன் ரூபா கிடைக்கின்றது. அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் தொழிலாளர்களின் பங்களிப்புடன் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இலாபம் இரட்டிப்பாகும்பட்சத்தின் அதன் நன்மையை கம்பனிகள் மட்டும் அனுபவிக்கமுடியாது. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கே அதன் பிரதிபலன்கள் சென்றடையவேண்டும். எனவே, இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.