சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க

89 0

மிக் விமான மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிறைச்சாலை வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, நேற்று அதிகாலை 4.37 மணியளவில், இலங்கை ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஊடாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு, கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மிக் 27 ரக விமான கொள்வனவின் போது இடம்பெற்ற சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பாக உதயங்க வீரதுங்க சந்தேகநபராக பெயரிடப்பட்டு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.