பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி காலமானார்

51 0

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், டெரி அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.கே.பச்சோரி காலமானார். அவருக்கு வயது 79.

இந்தியாவின் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி. டெரி எனப்படும் எரிசக்தி வளங்கள் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். இவர் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழுவின் தலைவராக இருந்தபோது, அந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
பருவநிலை மாற்றம் குறித்து கருத்துக்களைத் தெரிவித்திருந்த பச்சோரியின் அமைப்பு மற்றும் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் ஆகியோருக்கு 2007ல் இந்த நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதுதவிர பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பச்சோரி பெற்றுள்ளார்.
இந்நிலையில் 79 வயதான பச்சோரி இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூலை மாதம் மெக்சிகோவில் இருந்தபோது திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டது. அங்கிருந்து இந்தியா திரும்பிய அவர் டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் இதயநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னரும் அவரது உடல்நிலையில்  பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
தொடர்ந்து எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சோரியின் உடல்நிலை மேலும் மோசமானது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு டெரி அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.