ஜப்பான் கப்பலில் 5 தமிழர்களும் நலமாக இருக்கிறோம்- மதுரை வாலிபர் பேட்டி

35 0

எங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை. ஜப்பான் கப்பலில் 5 தமிழர்களும் நலமாக இருக்கிறோம் என்று கப்பலில் ஊழியராக பணியாற்றும் மதுரையை சேர்ந்தவர் கூறினார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் அருகில் உள்ள ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா என பல நாடுகளிலும் பரவி உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதல் கடலில் கப்பல் பயணம் செய்த பயணிகளையும் விட்டு வைக்க வில்லை. இங்கிலாந்து நாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், ஜப்பானில் சுற்றுலா கப்பலாக வலம் வந்து கொண்டு இருந்தது. அந்த கப்பலில் இருந்த பயணம் செய்து இறங்கிய பயணி ஒருவருக்கு ஹாங்காங் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
டைமன்ட் பிரின்சஸ் கப்பல்

இது குறித்து தகவலறிந்த ஜப்பான் அரசு, டைமன்ட் பிரின்சஸ் கப்பலை தனிமைப்படுத்த உத்தரவிட்டது. எனவே உடனடியாக அந்த கப்பல், கடந்த 3-ந் தேதி ஜப்பானின் யோகமோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

அந்த கப்பலில் இருந்த பயணிகள் யாரையும் கீழே இறங்கவோ, வெளியேறவோ அனுமதிக்கவில்லை. அந்த கப்பலில் 65 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 666 சுற்றுலா பயணிகள், 1,045 கப்பல் ஊழியர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 711 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 713 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கப்பலில் மொத்தம் 160 இந்தியர்கள் உள்ளனர். அதில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கப்பல் ஊழியர்கள் ஆவார்கள். அதன்படி மதுரையை சேர்ந்த அன்பழகன், ஜெயராஜ் (கோவை), முத்து (திருச்சி), டேனியல் (செங்கல்பட்டு), தாமோதரன் (கோவில்பட்டி) ஆகியோர் கப்பலில் உள்ளனர்.

அதில் மதுரை அன்பழகனின் மனைவி மல்லிகா, கலெக்டர் வினயிடம், தனது கணவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், ‘‘கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் எனது கணவர் அன்பழகன் உள்ளார். அவரை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வினய், ‘‘தூதரகம் மூலம் உங்களது கணவரை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்‘‘ என்றார்.

இதற்கிடையில் கப்பலில் உள்ள அன்பழகன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு வாட்ஸ்-அப் அழைப்பு மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜப்பான் நாட்டை சேர்ந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இதுவரை எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 3-ந் தேதி முதல் எங்கள் கப்பல் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் என்னுடன் சேர்த்து 5 தமிழர்கள் இருக்கிறோம். எங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. நாங்கள் அனைவரும் மிகவும் நலமாக இருக்கிறோம்.
5 நட்சத்திர வசதி கொண்ட ஓட்டலில் உள்ள வசதிகள் அனைத்தும் எங்கள் கப்பலில் உள்ளன. அனைவரையும் நல்ல முறையில் பார்த்து கொள்கிறார்கள். உலகின் முன்னணி நிறுவனங்களில் எங்கள் கப்பல் நிறுவனமும் ஒன்று. எனவே கப்பல் நிர்வாகம், மிகுந்த நல்ல முறையில் எங்களை வழி நடத்துகிறார்கள். ஒரு குறையும் இல்லை. வருகிற 19-ந் தேதி எங்களை கப்பலில் இருந்து வெளியே அனுப்புவதாக சொல்லி உள்ளனர். எனவே விரைவில் நாங்கள் அனைவரும் தமிழகம் திரும்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.