இலங்கை கிரிக்கட் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்!

251 0

பாராளுமன்றம் மீண்டும் கூடவிருக்கும் பெப்ரவரி 18, 19, 20 ஆம் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை கிரிக்கட் ஆகிய நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) அழைக்கத் தீர்மானித்திருப்பதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இன்றையதினம் (07) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனைவிட மத்திய வங்கியின் திறைசேறி முறி தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தடயவியல் கணக்காய்வு அறிக்கை, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸுக்கு எயார் பஸ்களை கொள்வனவு செய்தமை தொடர்பாக வெளிநாட்டில் வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு உள்ளிட்ட விடயங்களையும் கோப் குழுவில் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற எயார் பஸ் கொள்வனவு மற்றும் அதற்கான கொடுக்கல்வாங்கல் குறித்து கோப் குழுவினால் தயாரிக்கப்பட்ட இரு அறிக்கைகள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியின் திறைசேரி முறி தொடர்பில் கோப் குழுவின் விசாரணைகளில் வெளியான விடயங்களே, திறைசேரி முறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் தடயவியல் கணக்காய்வு ஆய்வுகளின் மூலமும் புலப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் கோப் குழுவின் செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்புத் தொடர்பில் நன்றி தெரிவித்த சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள், தொடர்ந்தும் ஊடகங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினார். கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருக்கும் சம்பிரதாயத்தை கோப் குழு உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் தொடர்ந்தும் பேண எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

இன்று (07) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ, டி.விசானக்க, ரஞ்சன் ராமநாயக்க, அஜித்.பி.பெரேரா, அஷோக அபயசிங்க, ஹர்ஷ.டி சில்வா, ஷிரியான விஜயவிக்ரம உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.