ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக உயர்த்த பரிசீலனை – பிபின் ராவத் தகவல்

51 0

ராணுவ வீரர்களின் ஓய்வு வயதையும் 58 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக முப்படை தலைவர் பிபின் ராவத் கூறியுள்ளார்.ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயது 54-58 ஆக இருக்கும் நிலையில், வீரர்கள் 37-38 வயதில் ஓய்வு பெறுகின்றனர். எனவே வீரர்களின் ஓய்வு வயதையும் 58 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக முப்படை தலைவர் பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘ராணுவ அதிகாரிகள் 58 வயதுவரை பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள், அல்லது அதை எட்டும் நிலையில் இருப்பார்கள். ஆனால் வீரர்கள் 37 அல்லது 38 வயதில் ஓய்வு பெறும்போது, தங்கள் சம்பளம் பாதியாக குறைந்து, இலவச வீடு இழந்து, சலுகை விலை சுகாதார திட்டம், கல்வி போன்றவையும் இழந்து தவிக்கின்றனர்’ எனக்கூறினார்.

38 வயதில் ஓய்வுபெறும் ஒரு வீரர் 70 வயது வரை உயிர் வாழ்ந்தால், சுமார் 17 ஆண்டு பணிக்கு 30-32 ஆண்டுகள் ஓய்வூதியம் பெறுவதாக கூறிய அவர், அதேநேரம் அந்த வீரர் 38 ஆண்டு பணி செய்து 20 ஆண்டு ஓய்வூதியம் ஏன் வாங்கக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பினார்.

எனவே ராணுவ வீரர்களுக்கும் ஓய்வு வயதை 58 ஆக உயர்த்துவது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இதில் முடிவு எட்டப்படும் எனவும் பிபின் ராவத் தெரிவித்தார்.