கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வந்த 4 வயது சீனா சிறுமி

256 0

மலேசியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரஸ் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, மலேசியா உள்பட 23 நாடுகளுக்கு பரவியது.
கொரோனா பரவுவதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் சீனர்களுக்கு இ-விசா ஆகியவற்றை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. சீனாவுக்கான விமான சேவையையும் நிறுத்தி வைத்துள்ளன.
சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், வடகொரியா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனோவின் தாக்குதல் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மலேசியா நாட்டில் 10 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மலேசியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த  4 வயது சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்குதலில் இருந்து குணமாகிய குழந்தை (தாயுடன்)
‘சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் அவர் லங்காவியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்படிருந்தார். தற்போது சிறுமியின் உடல்நலம் சீராக உள்ளது. பூரண குணமடைந்ததால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்’, என மலேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மலேசிய மருத்துவமனை வழங்கிய சுகாதார சான்றிதழுடன் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சீனாவுக்குத் திரும்புவார்கள் என சீனத் தூதரகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.