தரையிறங்கிய பின்னர் இரண்டாக உடைந்த துருக்கி விமானம்

345 0

துருக்கியில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதியதால் இரண்டாக உடைந்துள்ளது.

துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது. பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது.
பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துள்ளது.
மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமானம் உடைந்த பகுதி வழியாக பயணிகள் மீட்கப்பட்டனர். வானிலை மிகவும் ஈரப்பதமாக இருந்ததால் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் உடைந்த விமானம் மற்றும் அதன் உட்பகுதியில் தீப்பிடித்தபோது எடுத்த புகைப்படங்கள் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளன. சமூக வலைத்தளங்களில் வீடியோவும் வெளியாகி உள்ளது.