ரஞ்சனின் குரல் பரிசோதனை.?

235 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குரல் பரிசோதனைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிங்கள அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் வழங்கியுள்ளதாக அரசாங்க பகுப்பாய்வாளர் அரியானந்த வெலியங்க தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை குரல் பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதவான் கடந்த விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான பதிவுகள் ஆராயப்படுவதாகவும் அரச பகுப்பாய்வாளர் தெரிவித்தார்.

முன்னாள் சிங்கள இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் பதிவுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கடந்த ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க பெப்ரவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.