பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
பிரதமராக தெரிவான பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்காக இன்று பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரையான காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற தெரிவு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை இன்றைய அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிக்கவுள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் செயலிழந்த அனைத்து குழுக்களுக்குமான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்து அனைத்து கட்சிகளும் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவுகுழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டவுடன் தெரிவுகுழு கூட்டம் இடம்பெற்று புதிய தெரிவு குழுக்களுக்கான தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து கோப் குழு, அரச கணக்காய்வு குழு உள்ளிட்ட 10 குழுக்கள் செயலிழந்தன.
அதேபோல் கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பரிபூரண மதிப்பீடும் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்திய நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்காக இந்த மதிப்பீடு அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

