ரத்னதேரருக்கு முகத்தில் அடித்தாற்போல் கருத்துச் சொன்ன விக்கினேஸ்வரன்

253 0

இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் இரத்தின தேரர் ஏன் வடக்கு கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு மேல் இன்றுவரையில் தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததை மறந்து சிங்கள மொழியே நாடெங்கிலும் தனிமொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து வந்தார்? இதனால் பிளவு ஏற்படும் என்று அவர் கருதவில்லையா? இப்போதும் வட கிழக்கு மாகாண சபைகளுக்கு சிங்களத்தில் மட்டும் கடிதங்கள் மத்திய அரசினால் அனுப்பப்பட்டு வருகின்றன. அதைப் பிளவை ஏற்படுத்தும் செயல் என்று அவர் ஏன் சொல்லவில்லை? என அத்துரலிய ரத்ன தேரரின் நாக்கைப் பிடுங்குவதைப் போல கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று வெளியிட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில்,

ஒரு சாதாரண சிங்களக் குடிமகன் இவ்வாறு கூறியிருந்தால் நான் அதைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் வணக்கத்திற்குரிய அத்துரலிய இரத்னதேரர் சில காலத்திற்கு முன்னர் என்னை வந்து சந்தித்துச் சென்றவர். இப்பொழுதும் என்னுடன் நல்லுறவைக் கொண்டிருப்பவர். அவர் நீங்கள் கூறுவது போல் சொன்னாரோ இல்லையோ என்று நான் அறியேன். சொல்லியிருந்தால் அதற்குப் பின் வருமாறு பதில் கூற ஆசைப்படுகிறேன்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். வறுமையில் உள்ள மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். நாம் சமமானவர்கள் என்பது போன்ற அவரின் கருத்துக்களை நான் வரவேற்கின்றேன். அனைவருக்குள்ளும் ஓடும் இரத்தம் ஒன்றுதான் என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். அதை எவரும் மறுக்கவில்லை.

ஆனால் நான் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றேன் என்பதை என்ன அடிப்படையில் அவர் கூறினார் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் உண்மைகளை வெளியிட்டதால் இனப் பிளவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் கருதியிருந்தால் அதை நான் மறுக்கின்றேன். பொய்களைக் கூறி முழு சிங்கள மக்களையும் பிழையாக வழிநடத்திய ஒரு நாட்டில் நான் உண்மை இதுதான் என்றால் அதற்குப் பொறுப்பு நானா அல்லது பிழைகளை இதுவரை காலமும் வெளிப்படுத்திய வணக்கத்திற்குரிய தேரர் போன்றவர்களா? நான் பிளவை ஏற்படுத்தப் பார்க்கின்றேன் என்று அவர் கூறும் போது எனது உண்மைக் கூற்றுக்களை மறுக்க முடியாததால்த் தான் அவர் அவ்வாறு கூறுகின்றரோ என்று நான் நினைக்க வேண்டியுள்ளது. அதாவது “நாங்கள் பொய்களையும், புரளிகளையும், புரட்டுக்களை சிங்கள மக்கள் மனதில் இதுகாறும் பரவ விட்டுத்தான் வந்துள்ளோம். அவற்றைப் பொய் என்று அடையாளங்கண்டு உண்மையை நீங்கள் கூறப் போய் சிங்கள மக்கள் மனதில் பிளவை ஏன் உண்டாக்குகின்றீர்கள்?” என்று அவர் கேட்பது போல்த் தெரிகின்றது.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் வணக்கத்திற்குரிய தேரர் ஏன் வடக்கு கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு மேல் இன்றுவரையில் தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததை மறந்து சிங்கள மொழியே நாடெங்கிலும் தனிமொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து வந்தார்? இதனால் பிளவு ஏற்படும் என்று அவர் கருதவில்லையா? இப்போதும் வட கிழக்கு மாகாண சபைகளுக்கு சிங்களத்தில் மட்டும் கடிதங்கள் மத்திய அரசினால் அனுப்பப்பட்டு வருகின்றன. அதைப் பிளவை ஏற்படுத்தும் செயல் என்று அவர் ஏன் சொல்லவில்லை?

இதுவரை காலமும் நாட்டை சிங்கள பௌத்த நாடு என்று கூறி அதை ருசுப்படுத்த உழைத்த பலர் இன்று நான் கூறும் உண்மைகளை அடியோடு வெறுப்பதை நான் உணர்கின்றேன். ஒன்றில் நான் கூறும் உண்மைகளை அவர்கள் ஏற்க வேண்டும், அப்போது பிளவு ஏற்படாது. அல்லது நான் கூறுவன உண்மைக்குப் புறம்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும். அப்போதும் பிளவு ஏற்படாது. எனக்குத் தலைக்குனிவு மட்டுந்தான் அப்போது ஏற்படும்.

நான் என்ன கூறிவிட்டேன் பிளவை ஏற்படுத்த?

சிங்கள மொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழங்கு மொழியாகப் பரிணமித்தது. அதற்கு முன்னர் சிங்களவர் என்று கூறப்படும் சிங்களமொழி பேசுபவர்கள் இந்த உலகத்திலேயே எங்கேயும் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் சிங்களவர் என்று நாம் அடையாளம் காணும் மக்கள் மொழிவாரியாகவே அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.

தமிழ் மொழியும் இந்துமதமும் புத்தர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் ஒருங்கே பேசப்பட்டும் கடைப்பிடிக்கப்பட்டும் வந்துள்ளன. நாட்டைக் காக்கும் ஐந்து ஈஸ்வரங்களும் புத்த காலத்திற்கு முற்பட்டவை.

புத்த சமயம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழரே. அந்தக் காலத்தில் சிங்களவர் என்ற ஒரு மொழி வாரியான இனம் வருங்காலத்தில் பல நூற்றாண்டுகள் கழிந்து இருக்கப் போகின்றது என்று எவரும் கனவில் கூட சிந்தித்திருக்கவில்லை.

மகாவம்சம் பாளி மொழியில் எழுதப்பட்ட ஒரு புனைகதை. அதற்கும் சிங்களத்திற்கும் அல்லது சிங்களவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. புனைகதையைப் புனைகதையாகவே நாம் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்!

ஆதிகால சிங்களம் (Proto Sinhala) என்று ஒன்றிருந்தது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ஒரு மொழியையும் அதனைப் பேச முற்படுபவர்களையும் இந்தச் சொற்றொடர் குறிப்பதானால் பின்னர் சிங்களவரும் சிங்கள மொழியும் வரப்போகின்றன என்று கி.மு.300 ம் ஆண்டிலே ஜோதிடம் பார்த்து கூறியிருந்தார்களா? பின்னர் வந்த சிங்கள மொழியில் காணும் சொற்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததென்றால் வேற்றுமொழியில் இருந்த சொல்லையோ சொற்றொடரையோ சிங்களம் பின்னர் ஏற்றுக்கொண்டதென்பதே உண்மை. முன்னர் காணப்பட்டவை சிங்கள எழுத்துக்கள் அல்லது ஆதி சிங்கள எழுத்துக்கள் என்று அர்த்தமில்லை. பின்னையவற்றை முன்னையவற்றின் சாயலைக் கொண்டிருப்பதாகக் கூறலாம். ஆனால் பின்னையது தான் முன்பும் இருந்தது என்று கூறமுடியாது. முன்னையது இருந்த காலத்தில் பின்னையது நினைக்கப்படக்கூடவும் இல்லை.

இவ்வாறு பலவற்றை நான் உண்மையெனக் கண்டு கூறுகின்றேனே ஒளிய மக்களுக்குள் பிளவு ஏற்படுத்த நான் முனையவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் பிறந்து, படித்து, வாழ்ந்து வந்தவன் நான். என் அன்புமிக்க மருமகள்மார்கள் சிங்களவர்கள். சிங்கள மக்கள் மீது எனக்குப் பகையோ வெறுப்போ இல்லை. ஆனால் பொய்மையில் இலங்கை உழல்வதைக் காணப் பொறுக்க முடியாது இருக்கின்றது. நான் உண்மையைக் கூறி வருகின்றேன். நான் கூறும் உண்மைகளில் பலவற்றை பேராசிரியர் இந்திரபால 2005 ல் எழுதிய நூலில் காணலாம். நான் கட்டுக் கதைகளை வெளிக்கொண்டு வரவில்லை. இனத்துவேஷம் மிக்கவர்களே இதுகாறும் பொய்களையும் புனைகதைகளையும் உண்மையென சிங்கள மக்களை நம்ப வைத்துள்ளார்கள். ஆகவே பிளவு ஏற்படப் போகின்றதென்றால் புனைகதைகளை முதலில் அரங்கேற்றியவர்களே அதற்குக் காரணம். நான் அல்ல.