தஞ்சாவூர் பெரிய கோயிலில் யாகசாலை பூஜை தொடங்கியது: முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு

259 0

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று மாலை யாகசாலை பூஜை தொடங்கிய நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் விமான கோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பரிவார சந்நிதிகளில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த டிச.2-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள 338 சுவாமி விக்ரகங்களுக்கு மா காப்பு, அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணிதொடங்கியது. இதன் நிறைவாகநேற்று பெருவுடையாருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் கோயிலின் உற்சவ மண்டபத்தில் இருந்து சிவாச்சாரியார்களால் யாகசாலை மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டன. இதில் தருமபுரம் ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர், நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து வரும் 5-ம் தேதி வரை 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆய்வு செய்தார். தஞ்சை திலகர் திடலில் உள்ள கார் நிறுத்துமிடம், சிவகங்கை பூங்கா, யாகசாலை மண்டபம், கோயிலின் உள் பிரகாரம், வெளிப் பிரகாரம் ஆகிய பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.