கரோனா வைரஸால் சீன மலர்களை இறக்குமதி செய்ய தயக்கம்: சர்வதேச சந்தையில் தமிழக ‘ரோஜா’ மலர்களுக்கு மவுசு கூடுமா?

276 0

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் தாக்கத்தால் அங்கு உற்பத்தியாகும் மலர்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதனால், காதலர் தினம் நெருங்கும் நிலையில் சர்வதேச சந்தையில் தமிழகத்தில் விளையும் ரோஜா மலர்களுக்கு மவுசு ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடமும், ஏற்றுமதியாளர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மல்லிகை, ரோஜா, கார்னேசன் உள்ளிட்ட அலங்கார மலர்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இந்த மலர்கள், உள்நாட்டுத் தேவை போக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. ரோஜா மலர்கள் ஓசூர், கொடைக்கானல், ஊட்டியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் 75 சதவீதம் ரோஜா மலர்கள் ஒசூரில்தான் உற்பத்தி ஆகின்றன. அதுபோல, பெங்களூரு, புனே, நாசிக் பகுதிகளிலும் ரோஜா மலர் உற்பத்தி அதிகமாக நடக்கிறது. தற்போது காதலர் தினம் நெருங்குவதால் உள்நாட்டு சந்தை, சர்வதேச சந்தையில் அம்மலர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப விலை இன்னும் உயரவில்லை.

இந்நிலையில் மலர்கள், காய்கறிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து பெரிய ஏற்றுமதி சந்தையான இந்தியாவில் இருந்து, மற்ற நாடுகள் காய்கறிகள், மலர்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் காதலர் தினம் நெருங்கும் நிலையில் அம்மலர்களின் விலை உயருமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள்

ரோஜா மலர் ஏற்றுமதியாளரும், உற்பத்தியாளருமான ஒசூர் அருகே பாகலூரைச் சேர்ந்த சிவா கூறியதாவது:

ரோஜா மலர்கள் உற்பத்திக்கு இரவில் 18 டிகிரியும், பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பகல் நேரத்தில் 34 டிகிரியும், இரவு நேரத்தில் 22 டிகிரியும் இருந்ததால் 50 முதல் 55 நாட்களுக்கு பிறகு பூக்க வேண்டிய மலர்கள், 40 முதல் 45 நாட்களிலேயே பூத்துவிட்டன.

பூக்களின் விலையும் தற்போதுதான் ஓரளவு அதிகரித்து வருகிறது. உள்ளூர் சந்தைகளில் ஏற்றுமதி ரக ரோஜா பூ ரூ.8 முதல் ரூ.9 வரையும், சர்வதேச சந்தையில் ரூ.12 முதல் ரூ.15 வரையும் விற்கப்படுகிறது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால், அங்கிருந்து ரோஜா மலர்களை கொள்முதல் செய்ய மத்திய கிழக்கு ஆசிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன. சீனாவுக்கு அடுத்து பெரிய மலர் ஏற்றுமதி சந்தையான இந்தியாவில் இருந்து, அந்த நாடுகள் மலர்களை அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கிறோம்.

தற்போது சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான மலர்கள், காய்கறிகள் ஏற்றுமதி ஆகின்றன.

வரும் காதலர் தினத்தில் இந்த நாடுகள், அதிக அளவு இந்திய ரோஜாக்களை இறக்குமதி செய்தால் விவசாயிகளுக்கும், மலர் ஏற்றுமதியாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒய். ஆண்டனி செல்வராஜ்