பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு உறுதியளித்தாவாறு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது குறித்த திட்டத்திற்கான நிதி ஓதுக்கீட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரச மற்றும் திணைக்களங்களில் காணப்படும் தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்து கொள்வதே அரசின் நோக்கம் எனவும், உறுதியளித்தவாறு அவர்களுக்கு 53,000 த்திற்கும் குறையாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து பட்டதாரிகளுக்கும் மார்ச் முதலாம் திகதி முதல் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
முரண்பாடுகளை களைந்து போராட்டங்களுக்கான காரணத்தை கண்டறிவதே ஜனாதிபதியின் நோக்கம் எனவும், போராட்டங்களுக்கு தீர்வு காண ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள் அதிக நேரத்தை செலவிடுவதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நேற்றைய நாளில் மாத்திரம் 6 போராட்டங்கள் ஒரே நோக்கத்தை முன்வைத்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இவ்வாறு போராட்டங்களை முன்னெடுப்போருடன் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிக நேரத்தை செலவிடுவதாகவும் இதன் விளைவாக அரசாங்கம் அவர்களை கொண்டு நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கும் கடமைகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வீண்விரயமாவதாகவும் ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் ஆர்ப்பாட்டங்களால் வீதிகள் மூடப்படுவதால் பொது மக்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி செயலகம், ஆகவே யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆர்ப்பாட்டங்களால் விரயமாகும் பணத்தையும், காலத்தையும் உணர்ந்து செயற்படுமாறும் ஆர்ப்பாட்டகாரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

