வெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்

272 0

வெலிமடை, டயரபா தோட்டத்திற்கு சொந்தமான காணிகளை வெளியார்க்கு பிரித்து கொடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி நேற்று (24) டயரபா கீழ் பிரிவு மக்களால் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஆர்பாட்டத்தில் ஈடுட்டவர்கள் குறித்த காணிகளில் தாம் நெடுங்காலமாக விவசாயம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

அத்துடன் தாம் பயன்படுத்தி வரும் இந்த காணியை மறைத்து வெலிமடை பிரதேச செயலகம் அமைத்துள்ள வேலியை அகற்ற வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ´எமது நிலத்தை பறிக்காதே´ ´தேவையற்ற தலையீடுகளை நிறுத்து´ போன்ற பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த பிரச்சனைகளை வெலிமடை பிரதேச செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவித்தார்.

அதற்கமைய குறித்த காணி பிரச்சனைக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி தீர்வொன்றை பெற்று தருவதாக பிரதேச செயலாளர் உறுதியளித்தாக வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்பாட்டகாரர்களிடம் தெரிவித்தார்.

அதற்கமைய அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் பிரதேச செயலகத்திற்கு வருமாறு வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.