வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசு!

50 0

மதுரை பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு மாலையில் நிறைவடைந்தது. அதில், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன.
மாட்டுப்பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்பாக மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 9 சுற்றுகளில் 655 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், 16 காளைகளை பிடித்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய ராஜா இரண்டாம் இடமும், 10 காளைகளை அடக்கிய கார்த்திக் 3-ம் இடமும் பிடித்தார். இருவருக்கும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.
இதேபோல், முதல் பரிசு வென்ற காளை உரிமையாளருக்கு காங்கேயம் பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாம் பரிசு வென்ற காளையின் உரிமையாளர்க்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.