பிரதமர் ராஜினாமா- ரஷ்ய அதிபர் பதவியை தக்க வைக்க புதின் திட்டம்

52 0

ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ராஜினாமாவால் அதிபர் பதவியை தக்க வைக்க புதின் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடி மிர் புதின் நேற்று பாராளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசும்போது, அரசியலைப்பில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கான தனது புதிய திட்டங்களை விளக்கி கூறினார்.

ரஷியாவில் தற்போதைய அரசியலமைப்பு நடை முறைப்படி பிரதமரை அதிபர் நியமிப்பார். இதை பாராளுமன்றத்தின் கீழ் சபை உறுதி செய்யும். புதின் அறிவித்துள்ள அரசியலமைப்பு மாற்றத்தின் படி பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்க பாராளுமன்ற கீழ்சபைக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

அதிபரின் அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு மாற்றுவது குறித்து நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக புதின் கூறியுள்ளார்.

இந்த அரசியலைமைப்பு மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதிபரின் அதிகாரங்கள் அனைத்தும் பாராளுமன்றத்துக்கு மாற்றப்படும்.

புதினின் 4-வது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைகிறது. தற்போது தெரிவித்துள்ள அரசியலமைப்பு மாற்றத்தால் புதின் வேறு புதிய பொறுப்பை ஏற்கலாம் அல்லது மறைமுகமாக அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் புதின் ரஷ்யாவில் எப்போதும் அதிகாரம் மிக்க பகுதியில் (அதிபர்) இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து புதின் அறிவித்த சில மணி நேரத்திலேயே ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாடி மிர் புதினிடம் கொடுத்தார். மேலும் அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். ஆனால் அமைச்சர்களுக்கு கடைசி நேரத்தில்தான் ராஜினாமா குறித்து தகவல் தெரியும் என்று கூறப்படுகிறது.

அரசியமைப்பு மாற்றங்களை முன்னெடுத்து செல்வதற்காக தனது அரசை ராஜினாமா செய்வதாக டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக டிமிட்ரி மெத்வதேவ் பதவி வகித்து வந்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட அதிபர் புதின் புதிய அமைச்சரவை அமைக்கும் வரை மெத்வதேவ்வின் அமைச்சரவை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் மெத்வதேவ்வின் சேவையை வெகுவாக பாராட்டினார். டிமிட்ரி மெத்வதேவ் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்துள்ளார்.

புதிய பிரதமராக மினகல் மிஷூஸ்டினை நியமிக்க அதிபர் புதின் பரிந்துரை செய்துள்ளார். தற்போது மினகல் மிஷூஸ்டின் பெடரல் வரி சேவையின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

டிமிட்ரி மெத்வதேவ்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த டிமிட்ரி மெத்வதேவ் ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பதவி துணை அதிபருக்கு நிகரானது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே புதின், மெத்வதேவின் நோக்கங் களை பிரதமர் அமைச்சரவை நிறைவேற்ற தவறிவிட்டதாக ரஷிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் மிகைல் எம்.கஸ்யானோவ் கூறும்போது, அதிபர் புதின் தனது எதிர்காலம் குறித்து தெளிவான பதிலை அளித்திருக்கிறார். அது தான் எப்போதும் அதிபராக இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் என்றார்.

1999-ம் ஆண்டு முதல் புதின் ரஷ்யாவில் பிரதமர் அல்லது அதிபர் ஆகிய பதவி களில் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது 21-வது ஆண்டு அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார்.

ரஷ்யாவில் ஒருவர் அதிபர் பதவியில் தொடர்ந்து 2 முறைதான் இருக்க முடியும். இதனால் 2008-ம் ஆண்டு அதிபர் பதவியை மெத்வதேவுக்கு கொடுத்துவிட்டு பிரதமர் பதவி வகித்தார்.

அதன்பின் அவர் 2012-ம் ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். பின்னர் 2018-ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிபராக நீடித்து வருகிறார்.