உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்த நபர்களிடம் இருந்தும் அதேபோல் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடம் இருந்தும் இவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதற்கமைய இதுவரை 345 பேரிடம் ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளது.
ஆணைக்குழுவின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவுச்செய்யப்படவுள்ளன.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட அந்த அமைப்பை சார்ந்தவர்கள் பயிற்சிப்பெற்றதாக தெரிவிக்கப்படும் வனாத்துவில்லு, லெக்டொவத்த பகுதியை ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் அண்மையில் கண்காணித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வெடிக்கக்கூடிய பொருட்கள் சில மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தாக்குதலுக்கு முன்னர் தகவல் கிடைத்திருந்ததுடன் அது தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல் உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட விசாரணை அதிகாரிகள் பொதுஹெர, மாவனெல்ல மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் கண்காணித்தனர்.
அங்குள்ள மக்களிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

