சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

251 0

முல்லைத்தீவு – முள்ளியவளை கயட்டைக்காட்டுப் பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இருவர் இன்று (வெள்ளிக்கிழமை)  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை,  வனவளத்திணைக்களத்தினர் தலையீடு செய்து தடுத்து நிறுத்தியுள்ளதுடன்,  குறித்த அகழ்வு விடயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வனவளத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட குறித்த முள்ளியவளை கயட்டைக்காட்டுப் பகுதியில்,  வனவளத்திணைக்களத்தின் அனுமதியுடன்  கரைதுறைப்பற்று பிரதேசசபையினர் கழிவுப் பொருட்களை கொட்டி வந்துள்ளனர்.

இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை புதைப்பதற்காக கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளரின் ஒப்புதலுடன் சபைக்கு அறிவிக்கப்படாமல் குப்பைக்குழி ஒன்றினை வெட்டுவதற்கும் அந்த மண்ணை எடுத்துச்செல்வதற்கும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது அகழ்தெடுக்கப்படும் மண் மரநடுகைத்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவே அகழ்ந்து செல்லப்பட்டதாக கூறப்பட்டபோதிலும் பெருமளவு மண் வேறு இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.