தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் மீது குற்றச்சாட்டு

194 0
பெருந்தோட்ட பகுதிகளில் வீடுகளையும் ஏனைய கட்டடங்களையும் அமைக்க தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தினால் துரிதமாக ஆய்வறிக்கைகள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக்க வித்தானகமகே தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பதுளை கிளன்அல்பின் தியனகலை மற்றும் ஹாலி-எல ரொக்கத்தன்ன ஆகிய பெருந்தோட்டங்களுக்கான ´ஐ ரோட்´ வேலைத் திட்டம் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் மாவட்ட அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் பண்டாரவளைப் பகுதியின் புரோட்டன் தோட்டத்தின் காணித் துண்டுகள் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்த போதிலும் தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே குறித்த காணிகள் தொழிலாளர்களுக்கு தாமதமின்றி பகிர்ந்தளிக்கப் படுவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அம்பிட்டிகந்த தோட்டத்தின் 58 தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகளுக்கு இலவச மினசார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை தொடர்ந்தும் தாமதிக்காமல் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அப்புத்தளை தம்பேத்தன்னை – மவுசாகொல்ல பெருந்தோட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படும் 68 வீடுகள் விடயத்திலும் மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு கூடிய கவனம் செழுத்தல் வேண்டும் எனவும் அரவிந்தகுமார் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பசறையில் இயங்கி வரும் தொழில் பயிற்சி நிலையத்தை மூடுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி அதனை தொடர்ந்து இயங்க வைத்து தோட்ட பகுதி இளைஞர், யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் வெலிமடை டவுன்சைட் பெருந்தோட்டத்தில் தனது பன்முகப்படுத்தப்பட்ட பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் விநியோக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதனையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

பண்டாரவளை பிரதான பஸ் நிலையத்தில் பொது மலசல கூடம் மூடப்பட்டிருப்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்த அவர் எனவே குறித்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு முன் வைக்கப்பட்ட விடயங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அபிவிருத்தி இணைப்பு குழுக் கூட்டத் தலைவர் தேனுக்க விதான கமகே மற்றும் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

அத்துடன் சம்மந்தப்பட்ட திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும் அவர்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.