சுவிஸ் தூதரக ஊழியரை பிணையில் விடுவித்த நீதிவான், விதித்த கடும் நிபந்தனைகள்!

298 0

பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியபப்டுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பனிஸ்டர் பிரான்சிசை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று அனுமதி அளித்தார்.

 

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிவான்,  கானியாவின்  கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், தேசிய  அடையாள அட்டை பிரதி ஒன்றினையும்  பிணை ஆவணத்துடன் இணைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் சந்தேக நபர் தனது வதிவிடத்தை உறுதி செய்யும் கிராம சேவகர் அறிக்கையை அடுத்த தவணை மன்றில் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார். பிழையான முகவரியை அவர் வழங்கினால், பிணை சட்டத்தின் 12 ஆம் அத்தியாயத்தின் கீழ்  தண்டனைக்குரிய குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

தான் தற்போது வசிக்கும் வீட்டினை மாற்றுவதானால் அது குறித்து நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதிவான் நிபந்தனை விதித்தார்.

பிணை கையெழுத்திடும் போது, கடவுச் சீட்டை மன்றில் ஒப்படைக்கவும், தேசிய அடையாள அட்டை பிரதி ஒன்றினை கையளிக்கவும் உத்தரவிட்டா நீதிவான்,  வேறு வழிகளில் சட்ட ரீதியாக வெளிநாடு செல்ல முற்பட்டால் அது குறித்து முதலில் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நிபந்தனையிட்டார்.

மேலும் சந்தேக நபரின் கடவுச் சீட்டு இலக்கம், அடையாள அட்டை இலக்கத்தை  குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு அனுப்ப ஆலோசனை வழங்கிகிய நீதிவான், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தாலோ வேண்டுமென்று இழுத்தடிப்பு செய்தாலோ  பிணை ரத்தாகும் என எச்சரித்து வழக்கை எதிர்வரும் 2020 ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.