இராக், சிரியாவில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா; தீவிரவாத செயல் என ஈரான் கண்டனம்

235 0

இராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாத செயல் என்று ஈரான் விமர்சித்துள்ளது.

இராக்கில் இயங்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 25 பேர் பலியாகினர். 51 பேர் காயமடைந்தனர். மேலும் சிரியாவிலும் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.

இந்த நிலையில் இந்தத் தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது.

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்தவர்கள்

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவ்சாவி கூறும்போது, “இராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல் தீவரவாத செயல் என்பதற்கு இதுவே நேரடி சான்று. இதனை ஈரான் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான், அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.