உடன்படிக்கையின்றி ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – மஹிந்த

268 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாமல் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அந்தக் கட்சியின் பேச்சாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அவருக்கு எதிராக வாக்களித்தவர்கள்கூட, அவரின் வேலைத்திட்டங்களுக்கு வரவேற்பு அளித்துள்ளார்கள். சர்வதேசமும் இவரை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆசியாவின் நம்பிக்கைக்குரிய ஒரு ஜனாதிபதியாக இவர் மாறியுள்ளார்.

இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் மேற்கொள்ளாத வகையில், தனக்கான பல்வேறு சலுகைகளை அவர் இரத்து செய்துகொண்டுள்ளார். மக்களுக்காக வரிச்சுமையை குறைத்துள்ளார். தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளார்.

இதன் ஊடாக எதிர்காலத்தில், இலங்கை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலைமையும் வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் நிலைமையும் ஏற்படும்.

இவ்வாறான ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாமல் ஆதரவளிக்கும் என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.