பிரிவேனா கல்வியின் இறுதியாண்டு பரீட்சை மற்றும் அரச முகாமைத்துவ பிரிவின் இறுதியாண்டு பரீட்சையில் தோற்றும் இரண்டாம் நிலை மாணவர்களின் திறனை மேம்படுத்தி பரீட்சை நடைபெறும் நாளில் பரீட்சை நிலையங்களுக்கு குறித்த மாணவர்கள் தாமதித்து வருகைதரும் பட்சத்தில் அவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் அதிக மழையுடனான காலநிலையை கருத்திற்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு தாமதித்து வரும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தாமதித்து பரீட்சை எழுத வருகை தரும் மாணவர்களுக்கு பரீட்சை எழுத மேலதிக காலத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவவட்டங்களில் நிலவும் மழையுடனான காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
அந்த மாவட்டங்களுக்கு மேலதிகமாக நாட்டின் ஏதேனும் பகுதியில் சீரற்ற காலநிலையால் பாதிப்புகள் ஏற்படுமாயின் குறித்த இரண்டு பரீட்சைகளிலும் தோற்றும் பரீட்சாத்திகளுக்கு தாமதித்து பரீட்சை எழுத சந்தர்ப்பம் வழங்குமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

