பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு தயாரித்திருந்த அறிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும், மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைக்க துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது.
கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று பாராளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்துள்ளது.
அதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது.
இந்த அறிக்கை அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும் அனுப்பப்பட்டது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனத்துக்கு நிதி கிடைக்கப்பெற்றமை, சட்டபூர்வமற்ற நிர்மரிப்புக்கள் மற்றும் பலவந்தமாக அரச காணியினை சுவீகரித்துக்கொள்ளுதல் போன்ற அனத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமான அடிப்படையில் நிகழ்ந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவசர கால சட்டத்தின் கீழ் சுவீகரித்துக்கொள்வதற்கு (வடகொழும்பு மருத்துவக் கல்லூரி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போன்று) தவறிழைத்த அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராக துரித நடவக்கை மேற்கொள்தவற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு தனது அறிக்கையில் அப்போது பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

