தேசிய பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதில் முறைக்கேடு-கல்வி அமைச்சு

258 0

தேசிய பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து கல்வி அமைச்சின் விசேட விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பு தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ,

ஆசிரியர் அதிபர் சேவையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர்களின் சேவையை மூடிய  சேவைகளாக மாற்றுவதுடன் அதற்கான உரிய சம்பள கட்டமைப்பை மேற்கொள்வதற்கு அதிக காலம் தேவைப்படுவதால் , அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால சம்பள பரிந்துரையை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்தும் தொழிற்சங்கங்கள் அமைச்சருடன் கலந்துரையாடியது.

கல்வி அமைச்சின் விசேட விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் தேசிய பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலைகளில் பணம் அறவிடுதல், பாடசாலை ஆவண நடவடிக்கைகள், மற்றும் விண்ணப்பங்களை நிரப்புதல் போன்றவற்றின் காரணமாக ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்முறை தடைபட்டுள்ளதால் அதற்கு கல்விசாரா ஊழியர்களை நியமித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர்களின் வெற்றிடங்களை பூர்த்தி செய்தல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கம், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கம், அதிபர் தொழில் வல்லுநர்கள் சங்கம், அகில இலங்கை ஆசிரியர் ஆலோசனை தொழிற்சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொழில்சார் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை எதிர்பார்ப்பதாகவும் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.