பலவீனமான ஒருவரே எதிர்க்கட்சித் தலைவர்- எஸ்.பி

327 0

பலவீனமான எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர்தான் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் என இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்ட அவர், வெள்ளை வான் நாடகங்கள் அனைத்தும் விரைவில் அம்பலமாகும் எனவும் கூறினார். எஸ்.பி.திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பலமான எதிர்க்கட்சித் தலைர் என்றால், அரசியல் அறிவுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவைத்தான் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்திருக்க வேண்டும்.

ஆனால், இன்று பலவீனமான ஒருவர் தான் வந்துள்ளார். இதனையிட்டு நாம் எதுவும் கூற முடியாது.

அத்தோடு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களை கூறியிருந்தார். வெள்ளை வேன் சாரதி என ஒருவரை அழைத்துவந்து செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இந்தச் செயற்பாடானது தற்போதைய ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில்தான் அமைந்திருந்தது. இன்று வெள்ளை வேன் சாரதி எனக் கூறியவர் உள்ளிட்ட இருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன் பின்னர் பல உண்மைகள் வெளிவரும் என நாம் நம்புகிறோம். இவர்கள் பொய்யானவர்கள் என அனைவரும் அறிவார்கள். இவர்களின் நாடகம் விரைவில் நாட்டு மக்களுக்கு அம்பலமாகும் என நாம் உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.